சுற்றுலா பயணிகளுக்கு எதிரான சம்பவங்கள் 14 டிரைவர்களின் உரிமம் ரத்து நடவடிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு எதிரான சம்பவங்கள் 14 டிரைவர்களின் உரிமம் ரத்து நடவடிக்கை
ADDED : நவ 06, 2025 02:15 AM
மூணாறு:மூணாறு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட 14 டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது.
மூணாறிலும், சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல், வாகனங்களை வழி மறித்தல், வாக்குவாதம் உட்பட விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஜீப், கார் ஆகிய வாடகை வாகனங்களின் டிரைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மூணாறுக்கு அக்.,30ல் சுற்றுலா வந்த மும்பை பெண் சுற்றுலா பயணி ஜான்விக்கு உள்ளூர் கார் டிரைவர்களால் நேர்ந்த மோசமான அனுபவத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இச்சம்பவத்தில் மூன்று டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு எதிரான சம்பவங்களில் தொடர்புடைய டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது. அதன்படி மறையூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 8 டிரைவர்கள், மூணாறு ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 6 டிரைவர்கள் என 14 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதற்கான அறிக்கையை மூணாறு டி.எஸ்.பி., சந்திரகுமார், போக்குவரத்து துறை அதிகாரியிடம் தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

