ஹைதராபாதில் இடைவிடாது கனமழை: 1,000க்கும் மேற்பட்டோர் முகாமில் தஞ்சம்
ஹைதராபாதில் இடைவிடாது கனமழை: 1,000க்கும் மேற்பட்டோர் முகாமில் தஞ்சம்
ADDED : செப் 28, 2025 06:10 AM

ஹைதராபாத்: தெலுங்கானா தலை நகர் ஹைதராபாதில் இடைவிடாது பெய்த கனமழையால், அங்குள்ள மூசி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரங்களில் வசித்த 1,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தெலுங்கானான் தலை நகர் ஹைதராபாதில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதியான மூசாராம்பாகை ஒட்டியுள்ள மூசி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், அங்குள்ள ஓஸ்மான் சாஹர், ஹிமாயாட் நகர் ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களும் வேகமாக நிரம்பின.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, கரையோரமுள்ள மூசாராம்பாக் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதை தொடர்ந்து, மீட்புப்படையினர் உதவியுடன் அங்கு வசித்த 1,000க்கும் மேற்பட்டோர், அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மூசி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், கரை யோரங்களில் வசித்த மக்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, ஹைதராபாதில் உள்ள மஹாத்மா காந்தி பஸ் நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், பஸ்சிற்காக காத்திருந்த ஏராளமான பயணியர் சிக்கி தவித்தனர்.
இதையறிந்த மீட்புப் படையினர், பஸ் நிலையத்தில் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர்.
தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தெலுங்கானாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

