'நான் கொல்லப்பட்டால் நீங்களே பொறுப்பு': மாஜி முதல்வருக்கு பெண் எம்.எல்.ஏ., கடிதம்
'நான் கொல்லப்பட்டால் நீங்களே பொறுப்பு': மாஜி முதல்வருக்கு பெண் எம்.எல்.ஏ., கடிதம்
ADDED : ஆக 24, 2025 02:04 AM

லக்னோ: 'நான் கொல்லப்பட்டால், அதற்கு நீங்களும், உங்கள் கட்சியும்தான் பொறுப்பு' என, சமாஜ்வாதி கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ., பூஜா பால், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., ராஜு பால், மர்ம நபர்களால் 2005ல் கொல்லப்பட்டார்.
நீக்கம் ரவுடியாக இருந்து அரசியல்வாதியான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அட்டிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் உள்ளிட்டோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில், உத்தர பிரதேச சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது ராஜு பால் மனைவியும், சமாஜ்வாதி கட்சி எம்.எல்-.ஏ., வுமாக இருந்த பூஜா பால் இது குறித்து பேசினார்.
'என் கணவர் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை, யோகி தலைமையிலான அரசு தண்டித்தது. என் கணவரின் கொலைக்கு நீதி வழங்கிய முதல்வருக்கு நன்றி.
'என்னைப் போல் மாநிலத்தில் உள்ள பல பெண்களுக்கு அவர் தலைமையிலான பா.ஜ., அரசு பாதுகாப்பாக உள்ளது' என, தெரிவித்திருந்தார். இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியில் இருந்து கடந்த 14ம் தேதி பூஜா பால் நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பிறப்பித்த உத்தரவில், கட்சி தலைமைக்கு எதிராக நடந்ததால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அகிலேஷ் யாதவுக்கு, எம்.எல்.ஏ., பூஜா பால் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
என் கணவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில், எங்களுக்கு ஆதரவாக இல்லாமல், குற்றவாளிகளை சமாஜ்வாதி கட்சி காப்பாற்றியது.
நியாயமற்றது அகிலேஷ் யாதவ் குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடி எனக்கு நீதியை பெற்றுத் தருவார் என்று நம்பினேன். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது.
சமாஜ்வாதி கட்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
கடுமையான குற்றவாளிகளாக இருந்தாலும் கூட முஸ்லிம்கள் மட்டுமே முதல் தரமாக கருதப்படுகின்றனர்.
என் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்ய அகிலேஷ் யாதவ் எதுவும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சி கொலையாளிகளுக்கு ஆதரவாக நின்றது. பா..ஜ., அரசின் கீழ்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
என் நீக்கம் நியாயமற்றது; பாரபட்சமானது. சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் என்னை மிரட்டுகின்றனர். என் கணவருக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் நேரும் என நான் அஞ்சுகிறேன்.
எனக்கு ஏதாவது நேர்ந்தாலோ, நான் கொல்லப்பட்டாலோ அதற்கு அகிலேஷ் யாதவும், சமாஜ்வாதி கட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.