ஆட்டோ மீது கனரக வாகனம் மோதியது: பீஹாரில் 8 பேர் பலி
ஆட்டோ மீது கனரக வாகனம் மோதியது: பீஹாரில் 8 பேர் பலி
ADDED : ஆக 23, 2025 04:42 PM

பாட்னா: பீஹாரின் டானியாவன்-ஹில்சா சாலையில் இன்று காலையில் ஆட்டோ மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலம், டானியாவன் தொகுதிக்கு உட்பட்ட ஷாஜகான்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள டானியாவன்-ஹில்சா சாலையில் இன்று காலை சாலை விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
பலியான அனைவரும் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஹில்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டி மலாமா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இன்று திரிவேணி சங்கத்தில் உள்ள கங்கையில் புனித நீராடுவதற்காக பதுஹாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காலை 6.45 மணியளவில் ஆட்டோ ரிக்ஷாவும் கனரக வாகனமும் (ஹைவா) மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர், மேலும் காயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.