அவரு கணக்குல ரொம்ப வீக்; இது கணக்கில்லை, பொது அறிவு: காஷ்மீர் பிரசாரத்தில் காரசாரம்
அவரு கணக்குல ரொம்ப வீக்; இது கணக்கில்லை, பொது அறிவு: காஷ்மீர் பிரசாரத்தில் காரசாரம்
ADDED : செப் 27, 2024 10:09 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் 3வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நட்டா - ஓமர் அப்துல்லா இருவரும், ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடைசி மற்றும் 3வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் அக்.,1ம் தேதி நடைபெற இருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் 60.21 சதவீதமும், 2வது கட்ட தேர்தலில் 56.79 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. இது ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலில் பதிவான அதிகபட்ச ஓட்டுப்பதிவு சதவீதமாகும்.
இதனிடையே, 3வது கட்ட தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்தால், அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு, எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா, ' சிலர் பதிவாகியுள்ள ஓட்டு சதவீதத்தை பார்க்க வேண்டும். முன்பு 6 முதல் 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 58 முதல் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஓமர் அப்துல்லா கணக்கில் மோசம் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும்,' என கிண்டலாகக் கூறினார்.
அமைச்சர் ஜே.பி., நட்டாவின் இந்தப் பேச்சுக்கு ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கணக்கு பாடத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த 2014ம் ஆண்டு முதல் பல இடங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. ஸ்ரீநகரின் பல இடங்களிலும் கூட, கடந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் கூட இந்த முறை விழவில்லை. இதற்கு, கணிதம் தேவையில்லை. பொது அறிவு இருந்தாலே போதும், எனக் கூறியுள்ளார்.

