கடந்த 5 ஆண்டுகளில் கைதான முதல்வர்கள், அமைச்சர்கள் பட்டியல்!
கடந்த 5 ஆண்டுகளில் கைதான முதல்வர்கள், அமைச்சர்கள் பட்டியல்!
ADDED : ஆக 21, 2025 09:46 AM

புதுடில்லி: பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா லோக்சபா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட அமைச்சர், முதல்வர்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்.
பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் ஊழல் வழக்கில் சிக்கிய சிறைவாசம் அனுபவித்த, அமைச்சர்கள், முதல்வர்கள் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
மஹாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக்
இவர் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அமைச்சராக பதவி வகித்தார்.
ஊழல் வழக்கில் கடந்த நவம்பர் 1ம் தேதி 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்கு பிறகு, இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டில்லி முன்னாள் அமைச்சர், சத்யேந்தர் ஜெயின்
இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். சட்ட விரோத பண மோசடி வழக்கில், மே 30ம் தேதி 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் மேற்குவங்க அமைச்சர், பார்த்தா சாட்டர்ஜி
இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் ஜூலை 23ம் தேதி 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மூன்று வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.
டில்லி முன்னாள் துணை முதல்வர், மணிஷ் சிசோடியா
இவர் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவர். டில்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், பிப்ரவரி 26ம் தேதி, 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தமிழக முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி
இவர் திமுகவை சேர்ந்தவர். பண மோசடி வழக்கில், ஜூன் 14ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் இவர் 15 மாதங்கள் சிறையில் இருந்தார் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
டில்லி முன்னாள் முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்
இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். டில்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், மார்ச் 21ம் தேதி 2024 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் 6 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பதவிக்கு ஆபத்து வருமா?
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர். நில மோசடி வழக்கில் ஜனவரி 31ம் தேதி, 2024ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார்.
புதிய சட்டத்தால் இப்படி கைதாகி சிறையில் இருப்பவர்கள் பதவி பறிக்கப்பட உள்ளது.