20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பில்லை; தெளிவுபடுத்தியது மத்திய அரசு
20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பில்லை; தெளிவுபடுத்தியது மத்திய அரசு
UPDATED : ஆக 05, 2025 12:48 PM
ADDED : ஆக 05, 2025 11:29 AM

புதுடில்லி: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்களில் மைலேஜ் குறைகிறது என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது; எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக, வாகன இன்ஜின் செயல்பாடு மேம்படும் என்கின்றனர், வாகன உற்பத்தியாளர்கள்.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்களில் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், இன்ஜின்கள் மற்றும் பெட்ரோல் டேங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சமூகவலை தளங்களில் வதந்திகள் பரவின. இந்த தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
'இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதை தெள்ளத்தெளிவாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்களில் மைலேஜ் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபடவில்லை. இதனால் எரிபொருள் செயல்திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
E20 எரிபொருள் செயல்திறனை கடுமையாக குறைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. E10க்கு வடிவமைக்கப்பட்டு E20க்கு மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களில் மைலேஜ் 1 முதல் 2 % மட்டுமே குறையக்கூடும், மற்ற வாகனங்களில் 3-6% வரை குறையக்கூடும்.
இன்ஜினில் சரியான மைலேஜ் டியூனிங் செய்தும், சிறந்த உபகரணங்கள் பயன்படுத்தியும் இதைத் தடுக்கலாம். இதனை ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறியுள்ளது.
இ20 பெட்ரோல் காரணமாக, வாகன உதிரி பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கிளம்பிய புரளிக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, 'பழைய வாகனங்களில் ரப்பர் பாகங்கள், காஸ்கெட் போன்ற பாகங்கள், 20 ஆயிரம் கி.மீ.,க்கு பிறகு மாற்ற வேண்டியிருக்கும்.
அவற்றால் பெரிய செலவு இருக்காது. அவற்றை ரெகுலர் சர்வீஸ் செய்யும்போது மாற்றிக்கொண்டால் போதுமானது' என்று தெரிவித்துள்ளது. இதனால் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!
* 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துங்கள், இதனால் ஏராளமான பயன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி மாசு பயன்பாட்டுகளை குறைக்கலாம். கரும்பு மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து தயார் செய்யப்படும் எத்தனால், முறையே 65 சதவீதம் மற்றும் 50 சதவீதம் குறைவான பசுமை இல்ல வாயுக்களையே வெளியிடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014 - 15 முதல் எத்தனால் கலப்பு காரணமாக, நாட்டுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மிச்சம் ஆகியுள்ளது. எத்தனால் உற்பத்திக்கு காரணமான விவசாயிகளுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அது மட்டுமின்றி, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகன இன்ஜின் செயல்திறன், பயண அனுபவமும் மேம்படுகிறது என்று வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் எத்தனால் 80:20 கலவையானது கார்பன் டை ஆக்சைடு CO2 உமிழ்வைக் குறைக்கிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அதிகரிக்கிறது. இதனால் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் விருப்பமாக இருக்கிறது.