விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா: மஹா., அரசு அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா: மஹா., அரசு அறிவிப்பு
ADDED : ஆக 25, 2025 06:29 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கி அம்மாநில அரசு கவுரவித்துள்ளது.
நாடு முழுதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறும்.
இதற்காக மும்பையில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடத்தப்படும். இதில், பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்வர்.
இந்நிலையில், மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு, மஹாராஷ்டிரா அரசு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவித்துள்ளது. இதனால், பக்தர்களும், விழா கமிட்டியினரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
மும்பையில் விநாயகர் பந்தல்களை ஒருங்கிணைக்கும், பிரிஹன் மும்பை சர்வஜனிக் சமன்வய சமிதியின் தலைவர் நரேஷ் தஹி பாவ்கர் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை மாநில விழாவாக அறிவித்த மஹா., அரசு, விழா செலவுகளுக்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது . ஆனால், அந்த நிதி போதுமானதாக இருக்காது.
விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பினர் நுாலகங்கள் நடத்துவது, சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளை வழங்குவது என, ஆண்டு முழுதுமே சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கும் மாநில அரசு நிதியுதவி வழங்கினால், சமூகப் பணி தொய்வு இல்லாமல், தீவிரமாக நடக்கும். 1,800 பஜனை அமைப்பினருக்கு மட்டும் அரசு சார்பில் தலா 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதே போல், 25 ஆண்டுகள் பழமையான விநாயகர் சதுர்த்தி விழா அமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.