குரங்கு காய்ச்சலால் பாதித்தோருக்கு இலவச சிகிச்சை: தினேஷ் குண்டுராவ்
குரங்கு காய்ச்சலால் பாதித்தோருக்கு இலவச சிகிச்சை: தினேஷ் குண்டுராவ்
ADDED : பிப் 20, 2024 07:02 AM

பெங்களூரு: ''குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அறிவுரை வழங்கி உள்ளார்.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்த, சிக்கமகளூரு, உத்தர கன்னடா, ஷிவமொகா மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன், சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், குரங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்து கேட்டறிந்தார்.
காய்ச்சல் கண்டறியப்பட்ட உடன், பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆய்வறிக்கையில் குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிர்சியில் இக்காய்ச்சலை பரிசோதிக்க ஆய்வகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
l கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 103 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
l சிக்கமகளூரு, ஷிவமொகாவில் தலா ஒருவர் இக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதத்தை குறைக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது
l காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகளை விரைந்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, ஷிவமொகாவில் வைரஸ் கண்டறியும் ஆய்வகமும்; மணிப்பால் வைராலஜி மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்
l சிர்சி, சாகரில் காய்ச்சல் கண்டறிய புதிய பரிசோதனை மையங்கள் நிறுவப்படும்
l இக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க, இந்திய மருத்துவ ஆய்வக மையத்துடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி கிடைக்கும்
l இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும்
l சுகாதாரம், மகளிர், குழந்தைகள் நலத்துறையுடன் இணைந்து, கிராமப்புறங்களில் உள்ள ஆஷா பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

