UPDATED : ஆக 12, 2025 08:29 PM
ADDED : ஆக 12, 2025 03:26 PM

புதுடில்லி: '' தேர்தல் கமிஷன் தனது கடமையைச் செய்யவில்லை. நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்து வருகிறோம்'', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ராகுல் தலைமையில் பேரணி நடந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், ராகுல் இன்று பார்லிமென்ட் வளாகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஓட்டு மோசடி ஒரு தொகுதியில் மட்டும் நடக்கவில்லை. பல தொகுதிகளில் நடந்துள்ளது. தேசிய அளவில் அமைப்பு ரீதியாக நடந்துள்ளது. இது தேர்தல் கமிஷனுக்கு தெரியும். முன்பு ஆதாரம் இல்லாமல் இருந்தது. தற்போது உள்ளது.
அடித்தளம்
அரசியலமைப்பை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். ஒரு நபர் ஒரு ஓட்டு என்பது, அரசியலமைப்புக்கு அடித்தளம். இதனை அமல்படுத்துவது தேர்தல் கமிஷனின் கடமை. ஆனால், தேர்தல் கமிஷன் கடமையை செய்யவில்லை. ஆனால், நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்து வருகிறோம். தொடர்ந்து அதனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.