எதிர் திசையில் அத்துமீறி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உயிர் பலி ஏற்பட்டும் போலீசார் அலட்சியம்
எதிர் திசையில் அத்துமீறி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உயிர் பலி ஏற்பட்டும் போலீசார் அலட்சியம்
ADDED : நவ 05, 2024 12:44 AM

அக்கரை, சோழிங்கநல்லுாரில் இருந்து இ.சி.ஆர்., நோக்கி செல்லும், கே.கே.சாலையின் குறுக்கே பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயின் மேற்கு திசை கரை வரை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ், செம்மஞ்சேரி காவல் எல்லையில் உள்ளது.
கரையில் இருந்து நீரோட்ட பகுதி கிழக்கு திசை வரை, சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ், நீலாங்கரை காவல் எல்லையில் உள்ளது.
கே.கே.சாலை பகிங்ஹாம் கால்வாய் பாலத்தில், கடந்த மாதம் 21ம் தேதி, ஸ்கூட்டர் வாகனத்தில் சென்ற மாணவி, எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிடும்போது, கழிவுநீர் லாரி மோதி பலியானார்.
இந்த பாலத்தில், எதிர் திசையில் வாரும் வாகனங்களால், இதுபோன்ற விபத்து அடிக்கடி நடக்கிறது. அதனால், எதிர் திசை வாகனங்களை தடுப்பது, அதையும் மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே, விபத்துகளை தடுக்க முடியும்.
ஆனால், பாலம் பகுதியில் விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என, இரு காவல் ஆணையரக போலீசார் இடையே, விவாதம் நிலவுகிறது.
காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு, பாலத்தில் எச்சரிக்கை பலகை வைப்பது, விதிமீறி வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

