ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சீனாவிலிருந்து பெங்களூரு வருகை
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சீனாவிலிருந்து பெங்களூரு வருகை
ADDED : பிப் 15, 2024 04:35 AM

ஹெப்பகோடி, : ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் பெட்டிகள், சீனாவில் இருந்து பெங்களூரு ஹெப்பகோடி டிப்போவுக்கு நேற்று வந்தன.
பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் ஏற்கனவே இயக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில், ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்த ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு, சீனாவின் சி.ஆர்.ஆர்.சி., நஞ்சிங் புஜேன் நிறுவனத்திடம் டெண்டர் ஒப்படைக்கப்பட்டது. பெட்டிகள் தயாரான பின், பெங்., மெட்ரோ ரயில் நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதன்பின், சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து, ஆறு பெட்டிகள் கப்பலில், சென்னைக்கு இம்மாதம் 6ம் தேதி கொண்டு வரப்பட்டன. அங்கு சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றிதழ்களை பரிசீலித்து, லாரிகளில் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ரயில் பெட்டிகள் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, பெங்., ஹெப்பகோடி மெட்ரோ ரயில் டிப்போவுக்கு வந்து சேர்ந்தன.
ஒவ்வொரு பெட்டியும் தலா 38.7 டன் எடை கொண்டுள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே சோதனை ஓட்டம் நடத்தப்படும். மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது.
ஓட்டுனர் இல்லாததால், ரயிலில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருள் மூலம், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே இயக்கப்படும்.
இது குறித்து, பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 'எக்ஸ்' வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஓட்டுநர் இல்லாமல் இயங்க கூடிய மெட்ரோ ரயில் பெட்டிகள், ஹெப்பகோடி டிப்போவுக்கு வந்துள்ளன. இது முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
சோதனை ஓட்டம் நடத்தி, தொழில்நுட்ப முறைகள் முடிந்த பின், இந்தாண்டின் அக்டோபர், நவம்பரில் இயக்கப்படும். விரைவில் சோதனை ஓட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

