UPDATED : ஜன 06, 2026 03:28 PM
ADDED : ஜன 06, 2026 02:58 PM

புதுடில்லி: '' திமுக மற்றும் இண்டி கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானது என்பது தற்போது அம்பலமாகி உள்ளது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மன நிறைவு
இது தொடர்பாக தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில், பல நூற்றாண்டுகளாக கடவுள் முருகனை வணங்கி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அத்தகைய கோயில் பக்தர்களுக்கு, தமிழக உயர்நீதிமன்றம், இன்று பிறப்பித்த உத்தரவின் மூலம் நீதி வழங்கி உள்ளது மனநிறைவை அளிக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதும், கேலி செய்வதும், தாக்குவதும் ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வு அல்ல.
நீதிபதி அனுமதி
2023 செப்.,2 அன்று சனாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஒரு துணிச்சலான மற்றும் கண்டிக்கத்தக்க கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டது. இந்த இரண்டு தற்செயல் நிகழ்வுகள் கவனிக்காமல் இருக்கக்கூடாது.
முருகன் வீற்று இருக்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான கோயிலின் பக்தர்களுக்கு இன்று தமிழக உயர்நீதிமன்றம் நீதி வழங்கி உள்ளது. இது திருப்தியை அளிக்கிறது. பல நூண்ணாண்டுகளாக முருகனை வணங்கி விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக ஹிந்து தர்மம், இறைவனை போற்றி விளக்கு ஏற்றும் வளக்கத்தை கடைபிடித்து வருகிறது.
வெறுப்பு
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்தது. இது ஹிந்து தர்மத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிராக ஒரு தலைபட்சமான போக்கையும், ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையையும் தெளிவாக பிரதிபலிக்கிறது.
உண்மையில், இது ஸ்டாலின், அவரது மகன், திமுக மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள அவர்களின் நண்பர்களின் வெறுப்பையே இது காட்டுகிறது.
அச்சுறுத்தல்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது. நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திலும் அவர்களின் மனநிலை பிரதிபலித்தது. இந்த பதவி நீக்கத் தீர்மானத்தில் பிரியங்கா, டிம்பிள் யாதவ், சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரே, மற்றும் ஹிந்து விரோத முயற்சியில் முன்னணியில் இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்ட இண்டி கூட்டணியின் பல்வேறு எம்பிக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு வங்கி அரசியல்
திமுக மற்றும் இண்டி கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானவை என்பது அம்பலமாகி உள்ளது. இது பழங்கால வழக்கம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த வாதம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பிரச்னை. கடந்த காலத்தில் எந்த பிரச்னையும் இருந்தது இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்ட ஓட்டு வங்கி அரசியலைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

