பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய் சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய் சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
UPDATED : டிச 27, 2025 04:32 PM
ADDED : டிச 27, 2025 03:57 PM

புதுடில்லி: பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் திடீரென பாராட்டி பேசியிருப்பது அக்கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, திக்விஜய் சிங், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எஸ்ஐஆர் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
அப்போது, கூட்டத்தில் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் விரிவடைய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கட்சி மாநில அளவில் தலைவர்களை நியமித்தாலும், ஒரு குழுவை அமைப்பதில் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, திக்விஜய் சிங் தனது எக்ஸ் தளத்தில் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸை பாராட்டி ஒரு பதிவு போட்டிருந்தார். கூடவே, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, தற்போதைய பிரதமர் மோடி தரையில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோவையும் பகிர்ந்திருந்தார்.
அவரது பதிவில், 'இந்தப் போட்டோவை இணையதளத்தில் கண்டேன். இது என்னுடைய கவனத்தை மிகவும் ஈர்த்தது. ஒரு ஆர்எஸ்எஸ் அடிமட்ட சேவகனும், ஜனசங்கத்தின் (பாஜ) தொண்டனும், தலைவர்களின் காலடியில் எளிமையான முறையில் தரையில் அமர்ந்து, மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் உருவெடுக்கின்றனர். இது தான் அந்த அமைப்பின் சக்தி ஜெய் ஸ்ரீ ராம்,' எனக் குறிப்பிட்டார். மேலும், அந்தப் பதிவை மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடியை டேக் செய்து போட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அடிமட்ட தொண்டன் உயர் பதவிக்கு வருவது சாத்தியமில்லை என்பதைத் தான் அவர் மறைமுகமாக வலியுறுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே, பாஜவையும், பிரதமர் மோடியையும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் புகழ்ந்து பேசி வரும் நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

