UPDATED : அக் 29, 2025 03:21 AM
ADDED : அக் 28, 2025 08:38 AM
முழு விபரம்

காக்கிநாடா : வங்கக்கடலில் உருவான 'மோந்தா' புயல், ஆந்திராவின் காக்கிநாடா அருகே பலத்த சூறைக்காற்றுடன் நேற்று கரையை கடந்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 26ம் தேதி இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. இது தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் லிங்கப்பட்டினத்துக்கும் இடையே மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க துவங்கியது.
இதன்பின், மோந்தா புயலானது வலுவிழந்த நிலையில் ஆறு மணி நேரத்தை கடந்தபின் கரையை கடந்தது. அப்போது, கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக நெல்லுார் மாவட்டத்தின் 12.6 செ.மீ., இப்புயல் காரணமாக, ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காக்கிநாடா, மசிலிப்பட்டினம், குண்டூர், காவாளியில் கனமழை பெய்தது.
மோந்தா புயல் காரணமாக ஆந்திர கடலோரப் பகுதிகளில், ராயலசீமா, தெலுங்கானாவின் கடலோரப் பகுதிகளில், சத்தீஸ்கரின் தெற்கு மாவட்டங்கள், ஒடிஷாவில் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வீசிய சூறைக்காற்றுக்கு ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையோரங்களில் மின் கம்பங்கள் விழுந்தன.
இதுதவிர கனமழைக்கு 38,000 ஏக்கர் நெற்பயிர்களும், 3.41 லட்சம் ஏக்கர் தோட்டப்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.இதேபோல் ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி, கோனசீமா உட்பட ஏழு மாவட்டங்களில் நேற்றிரவு 8.30 முதல் இன்று காலை 6:00 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
ஆந்திராவில் புயலால் பாதிக்கப்படும் என வானிலை மையம் கணித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
9 விமானங்கள் ரத்து
சென்னை- ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்து பின்னர் ரயில் சேவை தொடக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்களும் விசாகப்பட்டினத்தில் இன்று விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

