தேர்தல்களில் சிக்கும் பணம் தொடர்ச்சியாக அதிகரிப்பு
தேர்தல்களில் சிக்கும் பணம் தொடர்ச்சியாக அதிகரிப்பு
ADDED : பிப் 04, 2024 11:49 PM

புதுடில்லி: மத்திய நேரடி வரி வாரியம் தலைவர் நிதின் குப்தா கூறிஉள்ளதாவது:
வழக்கமான சோதனைகளுடன், தேர்தல்களின்போது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும், கணக்கில் காட்டப்படாத பணத்தையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்து வருகிறது.
ஒரு மாநிலத்தில் முந்தைய தேர்தலைவிட அடுத்து நடக்கும் தேர்தலில் சிக்கும் பணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு இறுதியில், மிசோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
தேர்தல் கமிஷன் அறிக்கையின்படி, ரொக்கம், நகை, போதைப் பொருள், மது வகைகள், பரிசுப் பொருட்கள் என, 1,760 கோடி ரூபாய் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நேரத்தில், இந்த மாநிலங்களில், 2018ல் நடந்த தேர்தலின்போது, 239 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி, பார்த்தால், ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மட்டும், முந்தைய தேர்தலைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அதுபோல, 2022ல் தேர்தல் நடந்த கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத்தில், முந்தைய தேர்தலைவிட, ஆறு மடங்கு அதிகளவு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

