அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்: பிரதமர் மோடி
அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்: பிரதமர் மோடி
UPDATED : நவ 26, 2026 10:01 AM
ADDED : நவ 26, 2026 08:25 AM

- நமது நிருபர் -
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு: இந்த புனிதமான தருணத்தில், அரசியலமைப்பு நிர்ணய சபையின் அனைத்து மாபெரும் ஆளுமைகளுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு வடிவில் அவர்கள் வழங்கிய கொடை, இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும்.
வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை அடைவதற்கான பயணத்தில், இது தொடர்ந்து நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.
அறிஞர்களால் சிந்திக்கப்பட்டு, தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டங்கள் ஒருபோதும் மறைந்து போகாது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும், வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாகவும் அமைகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
நினைவுகூர்வோம்!
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில், ''இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், நமது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதியை, இந்திய அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதற்கும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் கடமைகளையும் உறுதிப்படுத்துவதற்கும் வழிகாட்டும் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அளப்பரிய பங்காற்றிய அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் போற்றிப் பாதுகாத்து, வலிமையான, வளர்ச்சியடைந்த, ஒற்றுமைமிக்க பாரதத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம். அனைவருக்கும் எனது இனிய இந்திய அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
