ADDED : ஜூலை 23, 2025 09:29 PM

பாலக்காடு; சொரனூர் - -பாலக்காடு ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இரும்பு கிளிப்புகள் இருந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் பகுதி வழியாக, சொரனூர் - -பாலக்காடு ரயில் வழித்தடத்தில், மாயன்னூர் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று இரும்பு கிளிப்புகள் இருந்தது.
இதை, அவ்வழியாக சென்ற, எர்ணாகுளம் --பாலக்காடு பாசஞ்சர் ரயிலின் 'லோக்கோ பைலட்' கண்டனர். ரயிலை நிறுத்தி அவர், உயர் அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தார்.
தகவல் அறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் தண்டவாளத்தின் பல்வேறு இடங்களில் ஐந்து கிளிப்புகள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா என, ஒற்றைப்பாலம் போலீசாரும் விசாரிக்கின்றனர்.

