ADDED : டிச 29, 2025 12:37 AM

புதுடில்லி: ''காங்கிரஸ் என்றால் கொள்கை; கொள்கைகள் ஒருபோதும் அழிவதில்லை,'' என அக்கட்சியின் 140வது நிறுவன தினத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் 140வது நிறுவன தின விழா நடந்தது. இதில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது: காங்கிரஸ் முடிந்துவிட்டது என்பவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். எங்களிடம் அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். கொள்கை எனும் முதுகெலும்பு இன்னும் நேராக தான் உள்ளது. இதனால் காங்.,குக்கு அழிவே இல்லை. அரசியல் சாசனம், மதச்சார்பின்மை, ஏழை களின் உரிமைகள் ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்ததில்லை.
காங்கிரஸ் மக்களை ஒன்றிணைக்கிறது; பா.ஜ., மக்களைப் பிரிக்கிறது. காங்கிரஸ் மதத்தை நம்பிக்கையாக மட்டும் பார்க்கிறது. ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறியது காங்கிரசின் பெரும் தலைவர்களால் தான். இவ்வாறு பேசினார்.

