அருணாச்சலை ஒட்டி சீனா ஹெலிகாப்டர் தளம்: பதற்றம் அதிகரிப்பு
அருணாச்சலை ஒட்டி சீனா ஹெலிகாப்டர் தளம்: பதற்றம் அதிகரிப்பு
ADDED : செப் 18, 2024 11:54 PM

புதுடில்லி :அருணாச்சல பிரதேசத்தை ஒட்டி புதிய ஹெலிகாப்டர் தளத்தை சீனா அமைத்து வருவதால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலுக்குப் பின், இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது.
இந்த சூழலில், கடந்த ஏப்ரலில், வடகிழக்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதால், இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவின் நடவடிக்கையை, அவ்வப்போது மத்திய அரசு கண்டித்து வருகிறது.
'அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி' என கூறி, சீனாவின் செயல்களை இந்தியா நிராகரித்து வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 20 கி.மீ., தொலைவில், சீனாவுக்கு சொந்தமான இடத்தில், புதிய ஹெலிகாப்டர் தளத்தை அந்நாடு அமைத்து வருகிறது.
அண்டை நாடான திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள நியிஞ்சி மாகாணத்தில், கோங்கிரிகாபு ஆற்றின் கரையோரம் இந்த ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோள் படத்தில் ஹெலிகாப்டர் தளம் கட்டப்படுவது தெளிவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு டிச.,1ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எந்த கட்டுமானமும் அங்கு இல்லை.
அதே மாதம் 31ம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் நிலம் துப்புரவு செய்யப்பட்டது தெரிகிறது. கடந்த 16ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது.
இந்த ஹெலிகாப்டர் தளத்தில் 600 மீ., துாரத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதற்கு இது சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு மூன்று ஹேங்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் வால்பகுதியில், புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
சீனாவின் பீஜிங் எல்லையில், நம் நாட்டு உதவியுடன் 'சியாகாங்' என்னும் இரட்டை பயன்பாட்டு கிராமங்கள் நிர்மாணிக்கும் பணிகள் நடந்து வரும் சூழலில், எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளம் கட்டப்பட்டு வருவது இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

