டில்லி மீது அக்கறை கொண்ட மோடி பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரேகா பேச்சு
டில்லி மீது அக்கறை கொண்ட மோடி பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரேகா பேச்சு
ADDED : செப் 18, 2025 02:37 AM

புதுடில்லி:“கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி டில்லி மாநகரின் வளர்ச்சிப் பணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து கவனித்துக் கொண்டார்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு டில்லியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கர்தவ்ய பாதையில், 'சேவா சங்கல்ப்' நடைப்பயணத்தை துவக்கி வைத்து முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
கவனிப்பு ஒவ்வொரு மாநிலத்தின் நலனுக்காகவும் பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தலைநகரான டில்லி மாநகரின் வளர்ச்சிப் பணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கவனித்துக் கொண்டார்.
டில்லி மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்த பங்களிப்புகளுக்காக பிரதமர் மோடிக்கு அவரது பிறந்த நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவுச் சாலைகள், 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவில் 400 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை, யமுனை நதியை சுத்தம் செய்ய நிதி ஆகியவற்றை மத்திய அரசு டில்லிக்கு வழங்கியுள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் விரைவுச் சாலைகள் வாயிலாக போக்குவரத்தை எளிதாக்கியுள்ளது.
பிரதமர் மோடி எப்போதும் டில்லிக்கு உறுதுணையாக நின்று அதன் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார். டில்லி மாநகரில் யஷோ பூமி மற்றும் பாரத் மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வை திட்டப்படிதான் வளர்ச்சியடைந்த டில்லி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, கர்தவ்ய பாதையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ரத்த தான முகாமில், முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள் ரத்த தானம் செய்தனர். பர்வேஷ் சிங் சர்மா, பங்கஜ் சிங், கபில் மிஸ்ரா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட் உட்பட அமைச்சர்கள், எம்.பி.,க்கள்., எம்.எல்.ஏ.,க்கள், டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி மாநகரின் அனைத்துக் கோவில்களிலும் நேற்று, பா.ஜ.,வினர் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.
7,500 மருத்துவ முகாம் பிரதமர் நரேந்திர மோடியின், 'ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார்' திட்டத்தின் டில்லியில் 7,500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுடன் ஒருங்கிணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், “இந்த மருத்துவ முகாம்கள் வாயிலாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்,” என்றார்.
வாழ்த்து ஹரியானா முதல்வர் நயாப் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பா.ஜ., மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் தருண் சுக், பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பா.ஜ., தலைவருமான அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு உட்பட பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
குப்பை கிடங்கு தொழிலாளருக்கு
ரூ.5,000 தீபாவளி போனஸ்
பால்ஸ்வா குப்பைக் கிடங்கை அகற்றும் பணியை நேற்று துவக்கி வைத்த, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியதாவது: டில்லியில் உள்ள பால்ஸ்வா, காஜிப்பூர் மற்றும் ஓக்லா குப்பைக் கிடங்குகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் 5,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின், 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் வாயிலாக, டில்லியின் மூன்று குப்பைக் கிடங்குளையும் அகற்ற தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளேன். இந்தப் பணிக்கு டில்லி அரசு மற்றும் மாநகராட்சி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.