அமித்ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: மஹூவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு
அமித்ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: மஹூவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 31, 2025 03:19 PM

ராய்ப்பூர்: வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவது பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீது, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அக்கட்சியின் மூத்த எம்பியான கல்யாண் பானர்ஜியுடன் மோதலில் ஈடுபட்டார். இதனையடுத்து கல்யாண் பானர்ஜி, திரிணமுல் காங்கிரசின் எம்பிக்கள் குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுபற்றி மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “ இந்திய எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எப். உள்ளிட்ட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பா.ஜ.வினர் குறை கூற முடியும்?” என மஹுவா ஆவேசமாக கேட்டார்.
“ நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர்கள் (பா.ஜ.) தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியை 5 படைகள் செய்து வருகின்றன. அவை மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
“ அப்படி இருக்கையில், ஆகஸ்ட் 15ம்தேதி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஊடுருவல் பற்றி பேசுகிறார். இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். அவர் இதைச் சொல்லும்போது உள்துறை அமைச்சர் சிரித்து கொண்டே கைதட்டுகிறார்.
“ ஊடுருவல்காரர்கள் தினமும் நம் நாட்டினுள் வந்து கொண்டிருக்கின்றனர். நம் அம்மாக்களையும், சகோதரிகளையும் மோசமான முறையில் பார்க்கிறார்கள்; நம் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்?” என மஹுவா கேட்டார்.
“ அமித் ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்க வேண்டும். வேறு வழியில்லை. உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமும் நம் எல்லைகளை பாதுகாக்க தவறினால் அது யார் தவறு? எங்கள் தவறா? உங்கள் தவறா? பிஎஸ்எப் என்னதான் செய்கிறது?” என்றார் மஹுவா.
புகார்
இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. மஹூவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவரை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், மஹூவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிஎன்எஸ் 196 (promoting enmity between different groups on the grounds of religion, race, place of birth, residence, language, etc) and 197 (imputations, assertions prejudicial to national integration) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.