இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
UPDATED : ஆக 24, 2025 11:14 AM
ADDED : ஆக 24, 2025 10:08 AM

புதுடில்லி: இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் பட்டியலில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் இந்தியாவில் பணக்கார முதல்வர் குறித்த பட்டியலை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிடும். அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்கள் உட்பட நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக முதல்வர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 30 மாநில முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதன் விபரம் பின்வருமாறு: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.981 கோடி சொத்து மதிப்புகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவர் நடத்தி வரும் பால் உற்பத்தி நிறுவனம் தான். இந்த நிறுவனத்தை அவர் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டார்.
கடந்த 1992ம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனத்தின் பல கிளைகள் உருவாகி, அவரது சொத்து மதிப்பு உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபு குடும்பத்தினர் வசம் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகள் உள்ளன.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறார். மொத்தமாக பட்டியலில் இடம் பெற்றுள்ள 31 மாநில முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்த பினராயி விஜயன் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பட்டியில் கடைசியில் இருந்து 3ம் இடத்தில் உள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு 8 கோடியே 88 லட்சம் ரூபாய் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு கடன் எதுவும் இல்லை.
கடைசி இடத்தில் மம்தா
அதேநேரத்தில் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களை விடவும் ஏழ்மையானவராக இருக்கிறார்.
இவர் வசம் ரூ.15 லட்சத்திற்கு அதிக மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. 2016ம் ஆண்டு சட்டசபை தே ர்தலின் போது இவரது சொத்து மதிப்பு ரூ.30.4 லட்சமாக இருந்தது. இவரது சொத்து மதிப்புகள் காலப்போக்கில் குறைந்துவிட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.