அயல் பணி பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்
அயல் பணி பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்
ADDED : டிச 15, 2025 01:12 AM

புதுடில்லி: 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு பரிந்துரைக்கும் போது, பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும' என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, மாநில அரசுகளிடம் இருந்து தகுதிஉள்ள அதிகாரிகள் அடங்கிய பரிந்துரை பட்டியலை ஆண்டுதோறும் பெற்று அவர்களை மத்திய பணிகளில் நியமிக்கிறது.
இந்த பரிந்துரைகள் தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய பணியாளர் துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியதாவது:
மத்திய பணி திட்டத்தின் கீழ் உள்ள பதவிகளுக்கும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் இயக்குநர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் அதிகாரிகளை பரிந்துரைக்கும் போது, பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரை போதுமான எண்ணிக்கையில் பரிந்துரைக்கவும். இதன் மூலம் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க முடியும்.
பரிந்துரைக்கப்படும் அதிகாரிகள், குறைந்தது இரு ஆண்டுகளுக்கு மாநிலத்தால் திரும்ப அழைக்கப்பட வாய்ப்பில்லாதவர்களாக இருக்க வேண்டும். பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற பின் அதிகாரியின் பெயரை திரும்பப் பெற்றால், அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய பணிக்கு வர முடியாது. அரசுமுறை வெளிநாட்டு பயணங்களும் தடை செய்யப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், மத்திய பணிக்கான அதிகாரிகளின் பெயர் பட்டியல்களை இணையதளம் வாயிலாகவே பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

