குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
ADDED : மார் 19, 2024 04:40 PM

புதுடில்லி: 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தொடர்பாக, 3 வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டிற்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டம் 2019 ல் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில், சிஏஏ சட்டத்துக்கான விதிகளை, மத்திய அரசு வெளியிட்டது. இது உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 236 மனுக்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
அப்போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பாணையை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 3 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
பின்னர் 3 வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு தரப்பில், பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

