'டிசைன் பை' அரசியல் செய்த பிரியங்காவுக்கு '1984' அச்சிட்ட பை கொடுத்த பா.ஜ., - எம்.பி.,
'டிசைன் பை' அரசியல் செய்த பிரியங்காவுக்கு '1984' அச்சிட்ட பை கொடுத்த பா.ஜ., - எம்.பி.,
ADDED : டிச 21, 2024 12:31 AM

புதுடில்லி: சீக்கியருக்கு எதிராக, 1984ல் நடந்த கலவரத்தை சுட்டிக்காட்டும் வகையில், சிவப்பு நிறத்தில், '1984' என்ற எண்கள் அச்சிட்ட கைப்பையை, காங்., - எம்.பி., பிரியங்காவுக்கு, பா.ஜ., - எம்.பி., அபராஜிதா சாரங்கி பரிசளித்தார்.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க, பார்லி.,க்கு முதன்முறையாக, காங்., - எம்.பி., பிரியங்கா வந்தார்.
பார்லிக்கு வந்த அவர், 'பாலஸ்தீனம்' என்ற வார்த்தை அச்சிட்ட கைப்பையை முதலில் எடுத்து வந்தார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேல் போர் நடக்கும் நிலையில், அவரது இந்த கைப்பை சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருத்து தேவையில்லை
இதற்கு விளக்கம் அளித்த பிரியங்கா, 'எனக்கு பிடித்த கைப்பையை எடுத்து வருகிறேன். இதில் மற்றவரின் கருத்து தேவையில்லை' என்றார்.
அடுத்த நாளே, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடக்கும் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், 'வங்கதேசம்' என்ற வார்த்தை அச்சிட்ட கைப்பையை பிரியங்கா எடுத்து வந்தார்.
இந்நிலையில், ஒடிசாவின் புவனேஸ்வர் தொகுதி பா.ஜ., - எம்.பி., அபராஜிதா சாரங்கி, பார்லி., வளாகத்தில் நேற்று, சிவப்பு நிறத்தில், 1984 என்ற எண்கள் அச்சிட்ட கைப்பையை பிரியங்காவுக்கு வழங்கினார்.
அபராஜிதா சாரங்கி கூறுகையில், “50 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.
''கைப்பை என்றால் பிரியங்காவுக்கு மிகவும் பிடிக்கும். முதலில் தயக்கம் காட்டிய அவர், பின், கைப்பையை பெற்றுக் கொண்டார்,” என்றார்.
கடந்த 1984ல், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு
இதையடுத்து, டில்லி உட்பட நாடு முழுதும், சீக்கியருக்கு எதிராக கலவரம் வெடித்தது. இக்கலவரத்துக்கு காங்., காரணம் என, குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதை பிரியங்காவுக்கு நினைவுபடுத்தும் வகையில், 1984 என்ற எண்கள் அச்சிட்ட கைப்பையை அபராஜிதா சாரங்கி வழங்கினார்.

