கர்நாடகாவில் பா.ஜ., வேட்பாளர் கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் ரூ.4.8 கோடி பறிமுதல்
கர்நாடகாவில் பா.ஜ., வேட்பாளர் கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் ரூ.4.8 கோடி பறிமுதல்
ADDED : ஏப் 26, 2024 01:11 PM

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபுரா தொகுதி பா.ஜ., வேட்பாளரும் எம்.பி.,யுமான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்.,26) லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம் பதுக்கி வைத்திருக்கும் தகவல் தெரிந்தால், அங்கு அதிரடி சோதனையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அங்குள்ள சிக்கபள்ளாபுரா தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (ஏப்.,25) அத்தொகுதி பா.ஜ., வேட்பாளரான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினர். அதில், பதுக்கி வைத்திருந்த ரூ.4.8 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதநாயக்கனஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கே.சுதாகருக்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

