மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் வாரிசு நிஷாந்த் உறுதி
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் வாரிசு நிஷாந்த் உறுதி
ADDED : நவ 16, 2025 03:43 PM

பாட்னா: மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீஹாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி உள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் வென்றுள்ளது. வெற்றியை ஒட்டு மொத்த கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் குமார் கருத்துக் கூறி உள்ளார். பாட்னாவில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது;
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக பெரிய வெற்றியை தந்த மக்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்களின் அரசாங்கம் மீண்டும் அமைய போகிறது.
தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று சில எதிர்பார்ப்புகளுடன் இருந்தோம். ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.
இந்த அனைத்து பெருமைகளும் மக்களையேச் சேரும். கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு மக்கள் வெகுமதி அளித்துள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார். வளர்ச்சி பணியை தொடர்ந்து, மாநிலத்தை முன்னேற்றுவார்.
இவ்வாறு நிஷாந்த் குமார் கூறினார்.

