ADDED : பிப் 07, 2024 07:38 PM

புதுடில்லி: பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ்குமார் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. கூட்டணி அரசில் இருந்து திடீரென விலகி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார் நிதீஷ் குமார்.
கவர்னர் மாளிகையில் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா செய்தார். பின் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக கடந்த ஜன.28-ல் பதவியேற்றார். அத்துடன் லோக்சபா தேர்தலுக்காக அமைந்துள்ள ‛‛இண்டியா'' கூட்டணியிலிருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் இன்று டில்லி சென்றிருந்த நிதீஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தே.ஜ. கூட்டணியில் மீண்டும் ஐக்கியமான பின் மோடியை நிதீஷ் குமார் முதல் முறையாக சந்தித்து பேசினார் என கூறப்படுகிறது. தொடர்ந்து அமித்ஷா, நட்டா ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 12-ம் தேதி பீஹார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதையடுத்து மோடியுடனான நிதீஷ் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

