பீஹாரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில்... 5.76 லட்சம் வாக்காளர்கள்!: 35.69 லட்சம் பேர் முகவரியில் இல்லை
பீஹாரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில்... 5.76 லட்சம் வாக்காளர்கள்!: 35.69 லட்சம் பேர் முகவரியில் இல்லை
ADDED : ஜூலை 18, 2025 03:00 AM

புதுடில்லி : பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் நிலையில், 5.76 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் - நவம்பரில் தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீஹார் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, கடந்த ஜூன் 23ல் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதன்படி, வீடு வீடாகச் சென்று தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்து வருகின்றனர்.
பரிந்துரை
'தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையால் தகுதியுள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுரிமை பறிக்கப்படும்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த உச்ச நீதிமன்றம், பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க மறுத்ததோடு, ரேஷன், ஆதார் ஆவணங்களையும் பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், பீஹார் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் நிலையில், 5.76 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:
தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடக்கின்றன.
ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது.
பீஹாரில் மொத்தம், 7.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, 5.76 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அறிவுரை
மேலும், வீடு வீடாகச் சென்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆய்வு நடத்திய போது, 35.69 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், அவர்களின் முகவரியில் இல்லை. இது தவிர, 12.55 லட்சம் வாக்காளர்கள் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தரவுகளின்படி, 17.37 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், பீஹாரை விட்டு நிரந்தரமாக வெளியேறி மற்ற மாநிலங்களில் இடம் பெயர்ந்தது தெரிய வந்துள்ளது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீஹார் வரைவு வாக்காளர் பட்டியல், ஆக., 1ல் வெளியிடப்படும். அதில் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் கட்டாயம் இடம் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது டில்லி நிருபர் -