இந்தியாவுக்கு வழிகாட்டும் சக்தி: வாஜ்பாயின் சேவையை நினைவு கூர்ந்தார் மோடி!
இந்தியாவுக்கு வழிகாட்டும் சக்தி: வாஜ்பாயின் சேவையை நினைவு கூர்ந்தார் மோடி!
ADDED : ஆக 16, 2025 10:00 AM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சேவை தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கு வழிகாட்டும் சக்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 16). இவர், 1996ல், 13 நாட்கள்; 1998 முதல் 13 மாதங்கள்; 1999 - 2004 வரை ஐந்தாண்டுகள் என, மூன்று முறை பிரதமராக இருந்தார்.
இவரது நினைவுதினத்தை யொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சேவையை, அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வாஜ்பாயின் நினைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும், அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவரது அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்க அனைவரையும் அவரது பணி ஊக்குவிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.