3 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; உண்மையை ஒப்புக்கொண்டார் கெஜ்ரிவால்!
3 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; உண்மையை ஒப்புக்கொண்டார் கெஜ்ரிவால்!
ADDED : டிச 14, 2024 12:45 PM

புதுடில்லி: 5 ஆண்டுகளில் 3 வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார்.
டில்லியில் வரும் 2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் 3 வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார்.
அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது யமுனை நதியை சுத்தம் செய்தல், ஒவ்வொரு வீட்டிற்கு சுத்தமான குடிநீர், டில்லியின் சாலைகளை ஐரோப்பிய தரத்திற்கு மாற்றியமைத்தல் ஆகிய 3 வாக்குறுதிகள் அளித்தேன். ஆனால் இந்த மூன்று வாக்குறுதிகளையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் 2 ஆண்டுகள் கோவிட் தொற்றுநோயால் கழிந்துவிட்டது.எங்கள் கட்சியினர் ஒவ்வொருவராக போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்னும் ஒரு வாய்ப்பு
இந்த சவால்கள் இருந்த போதிலும், தனது அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றாத 3 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். கடந்த 75 ஆண்டுகளில் ஏழைகளின் குழந்தைகள் நல்ல கல்வியை பெறுவார்கள் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. நாங்கள் அதை நிறைவேற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., பதிலடி
இது குறித்து, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பிரமுகர் அமித் மாளவியா கூறியதாவது: 'கோவிட் தொற்று மற்றும் தலைவர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டதால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் கைது செய்யப்படவில்லை.
ஆனால் டில்லி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் ஏன் வழங்கவில்லை? டில்லி ஆம்ஆத்மி அரசு தனிப்பட்ட ஆடம்பரங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அமித் மாளவியா குற்றம் சாட்டி உள்ளார்.

