காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை அவசியம்: முதல்வர் ரேகா புராரியில் நடத்திய சோதனை 'புஸ்'
காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை அவசியம்: முதல்வர் ரேகா புராரியில் நடத்திய சோதனை 'புஸ்'
ADDED : அக் 25, 2025 12:37 AM

புதுடில்லி: “அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை அவசியம்,” என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
தலைநகர் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் வரையிலான குளிர் காலத்தில் காற்று மாசு அதிகரிக்கிறது.
பட்டாசு வாகனப் புகை, கட்டுமானப் பணிகள் என பல்வேறு காரணங்களால் காற்றில் மாசு அதிகரித்தாலும், அண்டை மாநிலமான பஞ்சாபில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பது முக்கியக் காரணமாக விளங்குகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் காரணமாக டில்லியில் காற்று மாசு உச்சத்துக்கு சென்றது.
எனவே, டில்லியில் செயற்கை மழை பெய்வித்து காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர அரசு திட்டமிட்டு, அதற்கான சோதனை நேற்று முன் தினம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து, முதல்வர் ரேகா குப்தா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லியில் செயற்கை மழை பெய்விக்க இருப் பது இதுதான் முதன்முறை. காற்று மாசை கட்டுப் படுத்த செயற்கை மழை மிகவும் அவசியம். இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
குளிர்காலத்தில் உச்சத்துக்கு செல்லும் காற்று மாசை கட்டுப்படுத்த இது மிகவும் உதவும். நேற்று முன் தினம் இரவு புராரியில் செயற்கை மழை சோதனை நடத்தப்பட்டது. சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு மற்றும்- செயற்கை மழையை தூண்டும் கலவைகள் விமானம் வாயிலாக தூவப்பட்டது.
ஈரப்பதம் அந்த நேரத்தில் காற்றில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே ஈரப்பதம் இருந்தது. செயற்கை மழையை பெய்விக்க 50 சதவீத ஈரப்பதம் தேவைப்படுகிறது. அதனால், புராரியில் செயற்கை மழை பெய்யவில்லை.
வரும் 28 முதல் 30ம் தேதி வரை மேகமூட்டமான சூழ்நிலை எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை சாதகமாக இருந்தால் 29ம் தேதி டில்லி மாநகரின் முதல் செயற்கை மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்தும் கான்பூர் ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சோதனை நடத்திய போது புராரியில் மேகம் குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் 15 சதவீதமும் இருந்ததால், மழை பெய்யவில்லை' என கூறப்பட்டுள்ளது.
பொய் பரப்பும் கட்சி கிழக்கு டில்லி லட்சுமி நகரில், 70 லட்சம் ரூபாய் செலவில் அரசு அமைத்துள்ள, சத் பூஜைக்கான படித்துறைகளை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
சத் பூஜைக்கான ஏற்பாடுகளை அரசு பிரம்மாண்டமாக செய்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி பொய்களை பரப்பி வருகிறது. இந்த ஆண்டு சத் பூஜைக்காக அழகும் பிரமாண்டமும் நிறைந்த படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டில்லியில் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. பொய்களைப் பரப்புவது மட்டுமே அதன் வேலையாக இருக்கிறது.
ஆனால், பாஜ., ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்த எட்டு மாதங்களில் பா.ஜ., அரசு செய்த பணிகள் மக்களுக்குத் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து, துவாரகாவில் இரண்டு சத் படித்துறைகளையும் திறந்து வைத்தார்.

