சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியரின் வீடியோக்களை ஆபாச தளங்களுக்கு விற்ற வக்கிர கும்பல்: மருத்துவமனை 'சிசிடிவி'யை 'ஹேக்' செய்தது அம்பலம்
சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியரின் வீடியோக்களை ஆபாச தளங்களுக்கு விற்ற வக்கிர கும்பல்: மருத்துவமனை 'சிசிடிவி'யை 'ஹேக்' செய்தது அம்பலம்
UPDATED : நவ 05, 2025 06:16 AM
ADDED : நவ 05, 2025 02:10 AM

ராஜ்கோட்: குஜராத்தில், பிரபல மகப்பேறு மருத்துவமனையின், 'சிசிடிவி' காட்சிகளை, 'ஹேக்' செய்த ஆபாச கும்பல், கர்ப்பிணியர் வழக்கமாக பரிசோதனை செய்யும் தனிப்பட்ட காட்சிகளை, பணத்துக்காக ஆபாச தளங்களுக்கு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரிசோதனை
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், பயல் மகப் பேறு மருத்துவமனை செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஹேக் செய்த ஆபாச கும்பல், கர்ப்பிணியரின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோக்களை திருடி உள்ளது.
அந்த வீடியோக்களில், கர்ப்பிணியர், குழந்தைபேறுக்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள், மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது இடம் பெற்றுள்ளன.
இவை, கடந்தாண்டு ஜன., - டிச., வரையிலான காலத்தில் சிசிடிவியில் பதிவானவை.
பயல் மகப்பேறு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள், 'சி.பி.மோண்டா, மேகா எம்.பி.பி.எஸ்' என்ற, 'யு டியூப்' சேனல்களில் வெளியானதை தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
யு டியூப்பில் ஒருசில நிமிட வீடியோவை பார்த்தவர்கள், முழு வீடியோவை பார்க்க, 'டெலிகிராம்' சமூக ஊடகத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
அங்கு, கர்ப்பிணியரின் அந்தரங்க வீடியோக்கள், 700 முதல் 4,000 ரூபாய் வரை விற்கப்பட்டு உள்ளன. புனே, மும்பை , நாசிக், சூரத், ஆமதாபாத், டில்லி உட்பட நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளின் சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டு, 50,000க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை ஆபாச கும்பல் திருடி உள்ளது.
பாஸ்வேர்ட்
இது மட்டுமின்றி, பள்ளிகள், பெரு நிறுவனங்கள், தியேட்டர்கள், தனியார் குடி யிருப்புகளின் பாதுகாப்பு அம்சம் இல்லாத சிசிடிவி காட்சிகளையும் அந்த கும் பல் ஹேக் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வக்கிரமான குற்றத்தில் ஈடுபட்டோர், கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டாலும், டெலிகிராமில், அந்த வீடியோக்கள் தற்போதும் கிடைப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான சிசிடிவி அமைப்புகள், இணைய தளத்தில் எளிதாகக் கிடைக்கக்கூடிய, 'அட்மின் 123' போன்ற எளிதான பாஸ்வேர்டை நீண்ட காலமாக மாற்றாமல் வைத்திருப்பதே, ஹேக் செய்ய காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.
நிர்வாகக் கவனக் குறைவால், ஆயிரக்கணக்கான பெண்களின் தனி யுரிமை கேள்விக்குறியாகி உள்ளது.

