சினிமா பாணியில் சிறையில் இருந்து தப்பிய கொடூரக் கைதி; கேரளாவில் நள்ளிரவில் அதிர்ச்சி
சினிமா பாணியில் சிறையில் இருந்து தப்பிய கொடூரக் கைதி; கேரளாவில் நள்ளிரவில் அதிர்ச்சி
ADDED : ஜூலை 25, 2025 11:59 AM

கண்ணூர்: கேரளாவை உலுக்கிய சவுமியா கொலை வழக்கு குற்றவாளி சிறையில் இருந்து தப்பியோடினான். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தாலப் எனும் பகுதியில் மீண்டும் பிடிபட்டான்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுமியா,27. கொச்சியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2011ம் ஆண்டு எர்ணாகுளம் - சொர்ணூர் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த சவுமியாவை, அங்கு வந்த மாற்றுத்திறனாளி நபரான கோவிந்தசாமி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அவரிடம் தப்பிக்க முயன்ற சவுமியாவை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அந்த மாற்றுத்திறனாளியும் குதித்துள்ளான். பிறகு, பலத்த காயங்களுடன் கிடந்த சவுமியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி, நள்ளிரவு 1 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். சிறை கம்பிகளை உடைத்து வெளியேறிய அவன், துணிகளை கயிறு போல கட்டி, சிறையின் சுற்றுச்சுவரை தாண்டி தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதிக பாதுகாப்புள்ள சிறை பிரிவில் மின்வேலி கொண்ட சுற்றுச்சுவரை தாண்டி கோவிந்தசாமி தப்பிச் சென்றிருப்பது போலீசாருக்கு புரியாத புதிரானது. கோவிந்தசாமி தப்பிச் செல்லும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இதில், போலீசாருக்கு தொடர்பு இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இது பற்றி அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனிடையே, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கோவிந்தசாமியை போலீசார் தேடி வந்தனர். ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் சுகேந்திரன், சிறையில் மின்சாரத்தை துண்டித்து கோவிந்தசாமி தப்பிச் செல்வதற்கு யாரோ உதவியதாக, குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து தப்பிச் சென்ற கோவிந்தசாமியை கண்ணூரில் உள்ள தாலப் எனும் பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அங்கு பயன்பாடின்றி கிடந்த கட்டத்தில் இருந்த கிணற்றில் பதுங்கியிருந்த போது, கோவிந்தசாமியை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.