மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 50 வயது ஜோதிடர் உ.பி.,யில் கைது
மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 50 வயது ஜோதிடர் உ.பி.,யில் கைது
ADDED : செப் 07, 2025 04:13 AM

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில், 34 மனித வெடிகுண்டு வாயிலாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த பீஹாரைச் சேர்ந்த ஜோதிடரை, உத்தர பிரதேசத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிறுவப்பட்ட பிரமாண்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் அனந்த சதுர்த்தி நிகழ்ச்சி, மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று நடந்தது. நகரம் முழுதும் நிறுவப்பட்டிருந்த ஏராளமான சிலைகள், பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
பயங்கரவாதிகள் இந்த நிகழ்வில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக, மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறை, 'வாட்ஸாப்' எண்ணுக்கு கடந்த 4ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில், 'பாகிஸ்தானில் இருந்து 14 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர். மும்பையில், அனந்த சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக, 34 கார்களில் மனித வெடிகுண்டுகள் தயார் நிலையில் உள்ளனர்.
'மொத்தம் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த தாக்குதலில், 1 கோடி பேர் கொல்லப்படுவது நிச்சயம். இது, லஷ்கர் - இ - ஜிஹாதி பெயரில் விடுக்கப்படும் எச்சரிக்கை' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தின.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட வாட்ஸாப் எண் விபரங்களை ஆய்வு செய்ததில், அது பீஹாரைச் சேர்ந்த பிரோஸ் என்ப வரின் எண் என தெரியவந்தது. மும்பை போலீஸ் தனிப்படை பிரிவினர், பீஹார் போலீசார் உதவியுடன் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் முடிவில், டில்லியை ஒட்டி, உ.பி.,யில் அமைந்துள்ள நொய்டாவில் வசிக்கும் பீஹாரைச் சேர்ந்த அஸ்வின் குமார் சுரேஷ்குமார் சுப்ரா, 50, என்பவரை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.
வியாபாரியும், ஜோதிடருமான இவர், பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மனைவியை பிரிந்து தனியே வாழும் இவர், தன் நண்பரான பிரோஸ் அளித்த புகாரின் பெயரில், 2023ல் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.
விசாரணை அவரை பழி வாங்குவதற்காகவே, பிரோஸ் பெயரில், 'சிம்' கார்டு வாங்கி, அதை பயன்படுத்தி மும்பை போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.
அஸ்வின்குமாரிடம் இருந்து ஏழு 'மொபைல் போன்'கள், மூன்று 'சிம் கார்டு'கள், ஆறு 'மெமரி கார்டு'கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவருக்கு, சிம் கார்டு வழங்கிய நபரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.