ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு; 43 பேர் உயிரிழப்பு; மீட்கும் பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு; 43 பேர் உயிரிழப்பு; மீட்கும் பணி தீவிரம்
UPDATED : ஆக 14, 2025 10:38 PM
ADDED : ஆக 14, 2025 02:20 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். மேலும், சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டி கிராமத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 98 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 180 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ''திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது'' என கிஷ்த்வார் துணை கமிஷனர் பங்கஜ் சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சோஸ்டி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய மேகவெடிப்பு காரணமாக, கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டு வர பிரார்த்திக்கிறேன்!
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்; நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்; மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள், காஷ்மீர் கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.