ADDED : டிச 23, 2024 04:24 AM

மும்பை : மும்பையில், 19 வயது இளைஞர் காரை அலட்சியமாக, 'ரிவர்ஸ்' எடுத்த போது ஏற்பட்ட விபத்தில், தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் வில்லே பார்லே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர், 'ஹுண்டாய் கிரெட்டா' காரில் நேற்று வெளியே சென்றார்.
வாட்லா பகுதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லுாரி அருகே காரை நிறுத்திய அவர், ரிவர்ஸ் எடுத்துச் செல்ல காரை இயக்கினார். அப்போது காரின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையின் மீது கார் மோதியது.
அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், குடிபோதையில் இல்லை என்பது உறுதியானது.
இருப்பினும் கவனக்குறைவாக காரை இயக்கியதற்காக அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

