"கடின உழைப்பால் வெற்றி": 1 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி ஆணை வழங்கி பிரதமர் மோடி பேச்சு
"கடின உழைப்பால் வெற்றி": 1 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி ஆணை வழங்கி பிரதமர் மோடி பேச்சு
UPDATED : பிப் 12, 2024 02:33 PM
ADDED : பிப் 12, 2024 02:32 PM
புதுடில்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டில் யு.பி.ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். முன்னதாக, ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், 1 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய பின், கடின உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பாராட்டினார்.
யு.பி.ஐ சேவையை துவக்கினார் மோடி
இலங்கை, மொரிஷியஸ் நாட்டில் யு.பி.ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் பங்கேற்றனர். 

புரட்சிகரமான மாற்றம்
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ‛‛டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய கிராமத்தில் உள்ள சிறிய கடைகளில் கூட, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான நாள். இன்று நாம் நமது வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: சில வாரங்களுக்கு முன்பு ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு நான் பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன். 1000 ஆண்டுகளுக்கும் மேலான தென்னிந்திய நாணயங்கள் வெவ்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இன்னும் மேலும் அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
1 லட்சம் பணி நியமன ஆணை
முன்னதாக, ஆண்டுதோறும் ரோஜ்கர் மேளா என்னும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்ந்தெடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். இன்று(பிப்.,12) 1 லட்சம் பேருக்கு பணி நியமனம் ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கடின உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில், 2014ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஆட்சியில் இருந்த அரசை விட பா.ஜ., வேகமாக செயல்படுகிறது.
ஒவ்வொரு இளைஞரும் தனது திறனை நிரூபிக்க சம வாய்ப்புகளைப் பெறத் துவங்கி உள்ளார். ஆட்சேர்ப்பு நடைமுறையை வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசு செய்கிறது. எங்களுக்கு முன் இருந்த அரசை விட 10 ஆண்டுகளில் 1.5 மடங்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

