சீதை பிறந்த இடத்தில் பிரமாண்ட கோயில் கட்டுவோம்: அமித்ஷா தருகிறார் வாக்குறுதி
சீதை பிறந்த இடத்தில் பிரமாண்ட கோயில் கட்டுவோம்: அமித்ஷா தருகிறார் வாக்குறுதி
UPDATED : மே 16, 2024 05:34 PM
ADDED : மே 16, 2024 02:55 PM

பாட்னா: ' சீதை பிறந்த சீதாமர்ஹி நகரில் பிரமாண்ட கோயில் கட்டுவோம்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
பீஹார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: லாலு பிரசாத் யாதவ் தன் மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சியிடம் சரண்டர் அடைந்துள்ளார். மக்களே, நீங்கள் சொல்லுங்கள், ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?. ராமர் கோயில் கட்ட, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகளாக தடையை உருவாக்கியது. ஆனால் 2வது முறையாக, பிரதமர் ஆனதும் மோடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டினார். கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
பயப்பட மாட்டோம்
ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை. இரண்டு தடுப்பூசிகளை வழங்கி, கொரோனா காலத்தில் மக்களின் உயிரை பிரதமர் மோடி காப்பாற்றினார். அந்த நேரத்தில், தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் ஆகியோர் மோடியின் தடுப்பூசியை போட வேண்டாம் என கூறினர். ஆனால் பிரதமர் மோடியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ராகுல் சொல்வதை மக்கள் கேட்க வில்லை. எல்லோரும் தடுப்பூசி போட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் நக்சலைட் தாக்குதல்கள் அதிகம் நடந்தது.
நக்சலைட் தாக்குதல்
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, பீஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நக்சலைட் தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. சத்தீஸ்கரில் கொஞ்சம் மீதம் உள்ளது. ஆனால் இன்னும் 2 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் இருந்தும் நக்சலைட் தாக்குதல்களை ஒழிப்போம். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம்.
இடஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் ஒருபோதும் பாடுபடவில்லை. இடஒதுக்கீடு கிடைத்த பிறகும் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கப் பாடுபட்டார்.
பிரம்மாண்ட கோயில்
இது சீதாவின் மண், இங்கு பசுவதையை நாங்கள் ஏற்க மாட்டோம். பசுவதை மற்றும் பசுக் கடத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பா.ஜ., ஆட்சியில் பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம். சீதை பிறந்த சீதாமர்ஹி நகரில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம். உலகத்தின் அனைவரையும் ஈர்க்கும் ஒரு பிரமாண்டமான கோயிலாக அது இருக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
அயோத்தியில் ராமர் கோயிலை தொடர்ந்து, சீதா தேவி கோயில் கட்டுவோம் என அமித் ஷா பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

