மைசூரு பெண் கொடூரக்கொலை; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
மைசூரு பெண் கொடூரக்கொலை; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
ADDED : ஆக 25, 2025 07:52 PM

மைசூரு: கர்நாடகாவில் திருமணம் மீறிய உறவில் இருந்த 20 வயது பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை கைது செய்து, அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹுன்சூர் தாலுகா கெரசனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா. 20 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. கணவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜூ என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் சலிகிராமா கிராமத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், ரக்ஷிதாவை சித்தராஜூ கொலை செய்துள்ளார்.
பிறகு அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து சித்தராஜூவை கைது செய்து, ரக்ஷிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பு வைத்தனர். மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
போலீசார் கூறுகையில், 'சித்தராஜூவுடன் ரக்ஷிதா திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இருவரும் இடையே எழுந்த சண்டையின் போது ரக்ஷிதா கொலை செய்யப்பட்டார். செல்போன் வெடித்து ரக்ஷிதா உயிரிழந்ததாக காதலன் நாடகமாட முயன்றுள்ளார். வெடிமருந்து குச்சிகளை வாயில் திணித்து வெடிக்க வைத்து ரக்ஷிதா கொல்லப்பட்டுள்ளார். இதில் அவர் முகம் சிதைந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பான தடயவியல் துறையினருக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.