டெங்குவுக்கு மேலும் 2 பேர் பலி இதுவரை பாதிப்பு 2,115 பேர்
டெங்குவுக்கு மேலும் 2 பேர் பலி இதுவரை பாதிப்பு 2,115 பேர்
ADDED : அக் 08, 2024 07:35 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் உயிரிழந்தனர். மேலும், டெங்கு பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை 2,115 ஆக உயர்ந்துள்ளது.
லோக் நாயக் மருத்துவமனையில் செப்.8ம் தேதி, 54 வயதான ஒருவர் டெங்கு பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
அதேபோல, சப்தர்ஜங் மற்றும் மகாராஜா அக்ரசென் ஆகிய மருத்துவமனைகளில் தலா ஒருவர் டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்தனர்.
மாநகராட்சியின் வாராந்திர அறிக்கைப்படி தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் மூன்று பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதுவே, கடந்த ஆண்டு 19 பேர் மரணம் அடைந்தனர்.
செப். 29ம் தேதி முதல் அக். 5ம் தேதி வரையிலான 7 நாட்களில் மட்டும் 485 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நஜப்கர் மண்டலத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 1,052 பேர் டெங்கு காய்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 2,115 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், செப். 29ம் தேதி முதல் அக். 5 வரை 81 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் கடந்த 5ம் தேதி வரை 511 பேருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 426 ஆக இருந்தது.
சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கடந்த 5ம் தேதி வரை 69 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு 65 ஆக இருந்தது.
கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்தல், கழிவுப் பொருட்களை அகற்றாம இருத்தல் ஆகிய குற்றத்துக்காக 2 லட்சம் பேருக்கு டில்லி மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த 5ம் தேதி வரை 28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நேற்று வரை 29.91 கோடி வீடுகளுக்குச் சென்று, 9.26 லட்சம் வீடுகளுக்கு கொசு ஒழிப்பு மருந்து தெளித்துள்ளது.

