1988ல் கொலை; 2024ல் ஜாமின்: 104 வயது முதியவருக்கு கருணை காட்டிய சுப்ரீம் கோர்ட்
1988ல் கொலை; 2024ல் ஜாமின்: 104 வயது முதியவருக்கு கருணை காட்டிய சுப்ரீம் கோர்ட்
UPDATED : டிச 04, 2024 03:50 PM
ADDED : டிச 04, 2024 02:41 PM

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 104 வயது முதியவருக்கு கருணை அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது.
மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரசிக்த் மண்டல். 1920ம் ஆண்டு பிறந்தவர். 1988ம் ஆண்டு தமது சகோதரருடன் ஏற்பட்ட நிலத்தகராறு ஒன்றில் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது ரசிக்த் மண்டலுக்கு வயது 68. கைது நடவடிக்கையை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்று அவருக்கு 1994ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, கோல்கட்டா ஐகோர்ட்டில் 2018ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தண்டனை உறுதி செய்யப்படுவதற்கு முன், பல முறை அவர் பரோலில் வந்து விட்டார்.சுப்ரீம் கோர்ட் தண்டனையை உறுதி செய்து விட்டதால், 100 வயது கடந்த நிலையில் அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிட்டது. இதை காரணமாக கூறி, தமக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.உடல் உபாதைகள் இருப்பதால் தண்டனையை அனுபவிக்க முடியாது, எனவே குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை என்ற விதியில் இருந்து விலக்களித்து விடுவிக்க வேண்டும் என்று கோரினார்.
அவரது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கு வங்க அரசு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
மேலும் 2025ம் ஆண்டு ஏப்ரலில் தமது 104வது பிறந்த நாளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த கோர்ட், இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. தண்டனையில் இருந்து முழுமையாக விடுவிப்பது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
பிணை கிடைத்ததை தொடர்ந்து, மால்டா சீர்திருத்தப்பள்ளியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
ரசிக்த் மண்டல் கூறியதாவது;எத்தனை ஆண்டுகள் நான் சிறையில் இருந்தேன் என்று தெரியாது. எப்போது சிறைக்கு வந்தேன் என்றும் நினைவில்லை. சொந்த ஊரில் தோட்டம் ஒன்றை அமைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளேன். குடும்பம், பேரக்குழந்தைகளை பிரிந்திருந்தேன். இப்போது அவர்களுடன் எனது நேரத்தை கழிக்கலாம் என்று நினைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

