ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவில் யாத்ரீகர்கள் 10 பேர் பலி; 8 பேர் மாயம்; 6 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்பு
ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவில் யாத்ரீகர்கள் 10 பேர் பலி; 8 பேர் மாயம்; 6 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்பு
ADDED : ஆக 30, 2025 08:49 PM

சண்டிகர்: ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி, 10 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் புனித யாத்திரையை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். மோசமான வானிலை காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளால் மலையேறும் யாத்திரை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால், சம்பா மற்றும் பார்மோர் சாலை முடக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அனைவரும் மலைப் பாதைகளில் சிக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, 10 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 6 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு சம்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஹிமாச்சல் முதல்வர் சம்பாவில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். சிக்கித் தவிப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளுக்கு போதுமான ஏற்பாடுகளை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.