சவால்களை சமாளிப்பாரா சாம்ராஜ் நகர் காங்., - எம்.பி.,
சவால்களை சமாளிப்பாரா சாம்ராஜ் நகர் காங்., - எம்.பி.,
ADDED : ஜூன் 11, 2024 04:29 AM

சாம்ராஜ் நகரின் காங்கிரஸ் எம்.பி.,யாக பதவி ஏற்க உள்ள சுனில் போஸ், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாம்ராஜ் நகர் தனி தொகுதியில், மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி., துருவநாராயண் இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின், 2019ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மறைந்த சீனிவாச பிரசாத் வெற்றி பெற்றார்.
நடந்த முடிந்த தேர்தலில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா மகன் சுனில் போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
20 ஆண்டுகள் மந்தம்
நஞ்சுண்டப்பா கமிட்டி அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட மாவட்டமாக சாம்ராஜ் நகர் மாவட்டம் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இருபது ஆண்டுகளான பின்னரும், சீரான வளர்ச்சியை மாவட்டம் அடையவில்லை.
தற்போது நடந்து வரும் பணிகளும் முடிய, ஐந்தாறு ஆண்டுகள் ஆகலாம். உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களின் ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளை, புதிய எம்.பி., சுனில் போஸ் மேற்கொள்ள வேண்டும்.
என்னென்ன?
மாவட்டத்தின் தலைமையகமாக உள்ள சாம்ராஜ் நகரும் கூட போதிய வளர்ச்சி அடையவில்லை. அடிப்படை வசதிகளாக சாலை, பாதாள சாக்கடை பணிகள் பெரும்பாலான பகுதிகளில் இல்லை. மாவட்ட வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக சிறப்பு நிதி கேட்கப்பட்டு வருகிறது
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் வசிக்கும் இங்கு, வேலை வாய்ப்பு இன்றி இருப்போர் அதிகளவில் உள்ளனர். கல்லுாரி படிப்பை முடித்தவர்கள், பெரிய நகரங்கள், வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சாம்ராஜ் நகரில் தொழிற் பகுதி அமைக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று மற்ற தாலுகாக்களிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்
சாம்ராஜ் நகர் - கொள்ளேகால் - கனகபுரா வழியாக பெங்களூரு இணைக்கும் 'நானேகுடி ரயில் திட்டம்' பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.அதை செயல்படுத்துவதில் எம்.பி.,க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மைசூரு - சாம்ராஜ்நகர் ரயில் பாதை மின் மயமாக்கல் திட்டமும், கடைசி கட்டத்தில் முடங்கியது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்
நான்கு சரணலாயங்கள், நீர்வீழ்ச்சிகள், பிரபல கோவில்கள், சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்பு உள்ள மாவட்டம். சுற்றுலா துறையில் உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரசுக்கி நீர்வீழ்ச்சி பகுதியின் விரிவான வளர்ச்சிக்கான திட்டம் இன்னும் கோப்புகளில் மட்டுமே உள்ளது
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, துவங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணி, இன்னும் முழுமை பெறவில்லை. சில இடங்களில் நெடுஞ்சாலைகள் சீர்குலைய துவங்கி உள்ளன. சாம்ராஜ் நகர் - குண்டுலுபேட் இடையேயான மாநில நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக உருவாக்க வேண்டும்
கல்வி அறிவின்மையிலும், மாவட்டம் பின் தங்கி உள்ளது. தற்போது அதிகமான குழந்தைகள் கல்வி கற்று, மாவட்டம் கல்வியில் முன்னேற வேண்டும். அரசு சட்டக்கல்லுாரிக்கு அனுமதி கிடைத்தும், இதுவரை துவங்கவில்லை
மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. ஆனால் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனை, சிம்ஸ் மருத்துவமனையையே மக்கள் சார்ந்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள அவசர சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும்
மாவட்டத்தில் நான்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. பழங்குடியின மக்கள் அதிகளவில் உள்ளனர். காடுகளை ஒட்டிய பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் வளர்ச்சி அடையவில்லை. மஹாதேஸ்வர் மலையை சுற்றி உள்ள கிராமங்கள், வசதிகள் இல்லாமல், அங்குள்ள மக்கள் பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்
வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், விவசாயிகளும், பொது மக்களும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, வனப்பகுதியை மேம்படுத்துவது என பல சவால்கள், புதிய எம்.பி.,க்காக காத்திருக்கின்றன.\
- நமது நிருபர் -

