தந்தை சொல்லி கொடுத்தது என்ன? பா.ஜ.,வின் ராகவேந்திரா உருக்கம்
தந்தை சொல்லி கொடுத்தது என்ன? பா.ஜ.,வின் ராகவேந்திரா உருக்கம்
ADDED : மார் 31, 2024 05:03 AM

ஷிவமொகா : ''தர்மத்தையும், தர்மம் மற்றும் மதத்தை காப்பாற்றும் மடங்களை கவுரவிக்க வேண்டுமென, என் தந்தையிடம் இருந்து நான் கற்ற பாடம்,'' என, பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா கூறினார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
ஒவ்வொரு முறை, நான் போட்டியிடும்போது, ஈஸ்வரப்பாவின் 'ஆசி' எனக்கு கிடைக்கும். ஆனால் இம்முறை கிடைக்கவில்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் பேசும் பேச்சுகள், என்னை மேலும் பாதித்துள்ளது. அவரது பேச்சு, மக்களை தவறான பாதைக்கு இழுக்கிறது. உண்மைக்கு மாறான விஷயங்களை, மக்களின் முன்னிலையில் கூறுகிறார்.
ஈஸ்வரப்பா, என் தந்தை வயதில் இருப்பவர். நான் மடாதிபதிகளுக்கு போன் செய்து மிரட்டுவதாக, அவர் குற்றஞ்சாட்டுகிறார். நான் யாரையாவது மிரட்டியிருந்தால், தாய் ரேணுகாம்பா பார்த்துக் கொள்வார். நான் யாரையும் மிரட்டவில்லை என, சந்திரகுத்தி கோவிலுக்கு வந்து, மணியை அடித்து சத்தியம் செய்கிறேன். அதே போன்று ஈஸ்வரப்பாவும் கோவிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயாரா?
தர்மத்தையும், தர்மம் மற்றும் மதத்தை காப்பாற்றும் மடங்களை கவுரவிக்க வேண்டும் என, என் தந்தையிடம் இருந்து நான் கற்ற பாடம். தேவையின்றி எங்கள் மீதும், தொண்டர்கள் மீதும் குற்றஞ்சாட்டுகிறார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், எடியூரப்பாவை புலி என்றும், என்னையும், விஜயேந்திராவையும் குட்டி புலிகள் என, புகழ்ந்தார். இப்போது நாங்கள் வேண்டாதவர் ஆகிவிட்டோமா? என்னை 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என, வாழ்த்திய இவர், இப்போது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.
தன் மகன் காந்தேஷுக்கு, சீட் கிடைக்கவில்லை. இதனால் ஈஸ்வரப்பாவுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. கட்சி மேலிடத்துக்கென சில நடைமுறைகள் இருக்கும். இதன்படி வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு கமிட்டியில் எடியூரப்பா ஒரு உறுப்பினர் மட்டுமே. கமிட்டியில் பிரஹலாத் ஜோஷி உட்பட மாநிலத்தின் முக்கிய தலைவர்களும் உள்ளனர். ஆனால் ஈஸ்வரப்பா, எடியூரப்பா குடும்பத்தினரை மட்டுமே குறி வைத்துள்ளது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.

