'மூன்றாவது பெரிய பொருளாதாரம் சாத்தியம் ஆனால் ஏழை நாடாகவே இந்தியா இருக்கும்'
'மூன்றாவது பெரிய பொருளாதாரம் சாத்தியம் ஆனால் ஏழை நாடாகவே இந்தியா இருக்கும்'
ADDED : ஏப் 18, 2024 10:51 PM

புதுடில்லி, ''பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணப்படி, 2029ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தாலும், இந்தியா ஏழை நாடாகவே இருக்கும்,'' என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
கொண்டாட்டம் அல்ல
'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2029க்கு முன் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.
'என் மூன்றாவது ஆட்சிக் காலம் முடிவதற்குள், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கூறியுள்ளதாவது:
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவை உதாரணமாக பாருங்கள். பணக்கார நாடாக மாறுவதற்கு, வளர்ந்த நாடாக மாற வேண்டிய அவசியமில்லை.
என் பார்வையில், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது சாத்தியம் தான். ஆனால் அது ஒரு கொண்டாட்டம் அல்ல.
உற்பத்திக்கு, மக்கள்தொகை மிகவும் முக்கிய காரணியாகும். நம் நாட்டில், 140 கோடி மக்கள் இருப்பதால், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம்.
வலுவான அரசு
ஆனால் நாம் இன்னும் ஒரு ஏழை நாடாகவே இருக்கிறோம்.
தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலான உலக நாடுகள் பட்டியலில், இந்தியா 139வது இடத்தில் உள்ளது. பிரிக்ஸ் மற்றும் ஜி --- 20 நாடுகளிலும், இந்தியா மிகவும் ஏழ்மையாக உள்ளது.
முன்னோக்கி செல்வதற்கான திட்டங்கள் மிகவும் தெளிவாக உள்ளது. வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்த வேண்டும்.
பலன்கள் மக்களை சரியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
வரும் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என, பிரதமர் கூறி வருகிறார். ஒரு வளர்ந்த நாடாக மாற, நான்கு அம்சங்கள் தேவை. அவை, சட்டத்தின் ஆட்சி, வலுவான அரசு, பொறுப்புக்கூறல் மற்றும் சுதந்திரமான நிறுவனங்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

