நோட்டாவுக்கு சாட்டை சின்னம் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்
நோட்டாவுக்கு சாட்டை சின்னம் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்
ADDED : ஏப் 08, 2024 05:04 AM

ஹூப்பள்ளி: கட்சிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், நோட்டாவுக்கு, 'சாட்டை'யை சின்னமாக பயன்படுத்த, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, கலசா பண்டூரி போராட்ட குழு தலைவர் விஜய்குல்கர்னி வலியுறுத்தி உள்ளார்.
தேர்தல்களில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்க, 2013ல் 'நோட்டா' கொண்டு வரப்பட்டது.
இதற்கு சின்னம் என்று எதுவும் இல்லை. 'என்.ஓ.டி.ஏ.,' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
இந்நிலையில், ஹூப்பள்ளியை சேர்ந்த கலசா பண்டூரி போராட்டக் குழு தலைவர் விஜய் குல்கர்னி கூறியதாவது:
மின்னணு ஓட்டு இயந்திரத்தில், நோட்டா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு சின்னம் எதுவும் இல்லை. இது பெரும்பாலான வாக்காளர்களுக்கு தெரிவதில்லை.
இதனால் நோட்டாவுக்கான உண்மையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே தான் நோட்டாவுக்கு சின்னம் ஒதுக்க வலியுறுத்துகிறேன்.
எனவே தான் விவசாயிகள் பயன்படுத்தும், 'சாட்டை'யை நோட்டாவுக்கான சின்னமாக பயன்படுத்தி வலியுறுத்தி வருகிறேன்.
இது தொடர்பாக, ஒரு மாதத்தக்கு முன், தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், எந்த பதிலும் வரவில்லை. எனவே, தலைமை தேர்தல் கமிஷன், மாநில தலைமை செயலருக்கு, எனது வழக்கறிஞர் குருதத்தா மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

