ADDED : ஜூன் 11, 2024 04:41 AM

காசியில் இருந்து மூன்று பிராமணர்கள், சிவலிங்கத்துடன் யாத்திரை புறப்பட்டனர். மூவரும் சிவனின் தீவிர பக்தர்கள். அவர்களின் ஆன்மிக பயணத்தின் ஒரு நாள், 'கயபடா கோவில்' என்ற இடத்துக்கு மாலை நேரத்தில் வந்தனர்.
தற்போது இப்பகுதியை தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின் உப்பினங்கடி என்று அழைக்கின்றனர். மூவரும் இங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் ஒருவர் மட்டும், சிவலிங்கத்துடன் புத்துார் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி மறுநாள் காலை எழுந்து புனித நீராடினார். பின், அப்பகுதியை ஆட்சி செய்து வந்த 'பங்கா ராஜா'வை சந்திக்க சென்றார்.
பிரசவ வலியால் அவதி
அன்றைய தினம் திங்கட்கிழமை என்பதால், சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய, பூஜை பொருட்கள் சேகரித்து கொண்டார். ராஜாவின் சகோதரி, பிரசவ வலியால் அவதிப்பட்டிருந்தார். இதனால், பிராமணர் தன்னை சந்திக்க வந்தது குறித்து, அவர் கவனிக்கவில்லை.
ஆனாலும், பிராமணரின் முகத்தில் ஜொலித்த தேஜசை கண்டு பிரமித்த அங்கிருந்த ஒரு அமைச்சர், ராஜாவின் கவலையை, பிராமணரிடம் விளக்கினார். அப்போது தன்னிடம் இருந்த லிங்கத்தை வைத்து வணங்கி, ராஜாவின் சகோதரி நலமடைய பூஜை செய்தார்.
இதையடுத்து அப்பெண், அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் சந்தோஷமடைந்த ராஜா, பிராமணருக்கு நன்றி தெரிவித்தார்.
வழக்கமாக சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும்போது, மேஜையோ அல்லது இருக்கையில் வைத்தோ பூஜிப்பார். குறிப்பிட்ட நாள் ஒன்றில், தன் கையில் இருந்த லிங்கத்தை தெரிந்தோ, தெரியாமலோ, நிலத்தில் வைத்து பூஜை செய்தார். பூஜைக்கு பின், லிங்கத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவர் வருத்தம் அடைந்தார்.
பட்டத்து யானை
இதையறிந்த ராஜா, தனது படை வீரர்கள் மூலம் சிவலிங்கத்தை துாக்க முற்பட்டார்; ஆனாலும் முடியவில்லை. கடைசியாக ராஜாவின் பட்டத்து யானை வரவழைக்கப்பட்டது. சிவலிங்கத்தை யானை மூலம் துாக்க முயற்சிக்கப்பட்டது. அப்போது சிவலிங்கம் பெரிதாக வளர்ந்தது. இதனால் யானை, சின்னா பின்னமாக துாக்கி வீசப்பட்டது.
யானையின் தந்தம் விழுந்த இடம் 'கொம்பெட்டு'; உடல் பகுதி விழுந்த இடம் 'கரியாலா'; கால்கள் விழுந்த இடம் 'கார்ஜாலா'; தும்பிக்கை விழுந்த இடம் 'கைபாலா'; வால் விழுந்த இடம் 'பீடிமஜலுா'; தலை விழுந்த இடம் 'தாலேபட்டி'; முதுகு விழுந்த இடம் 'பெரிபதவு' என்று அழைக்கப்படுகிறது. யானையின் உடல், கோவிலின் தெப்பகுளத்தில் விழுந்தது.
இதையடுத்து, சிவலிங்கம் மஹாலிங்கேஸ்வரா என்று அழைக்கப்பட்டு வருகிறார். 12ம் நுாற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும்.
இங்கு மஹாலிங்கேஸ்வரா மட்டுமின்றி, நாகதேவதை, விநாயகர், அய்யப்பன், நவக்கிரஹம், நந்தி மண்டபம், வசந்த கதே; தேவி; தெய்வ குடி; சுப்பிரமணியர், சஹஸ்தாரா சன்னிதிகளும் உள்ளன. இங்கு துலாபாரம் செய்யும் வசதியும் உள்ளன.
11_Article_0001, 11_Article_0002, 11_Article_0003
மஹாலிங்கேஸ்வரர். (அடுத்த படம்) கோவிலின் முகப்பு. (கடைசி படம்) பிரம்மோற்சவ விழாவில் தேர் பவனி.
**********

