ராகுல் பா.ஜ.,வை எதிர்க்கவில்லை; எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்: பினராய் விஜயன்
ராகுல் பா.ஜ.,வை எதிர்க்கவில்லை; எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்: பினராய் விஜயன்
UPDATED : ஏப் 04, 2024 01:56 PM
ADDED : ஏப் 04, 2024 12:21 AM

மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்: பா.ஜ.,வை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து, ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பொருத்தமற்றது. அவர், கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.அவர் வயநாட்டில் பா.ஜ.,வை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.
டவுட் தனபாலு: தேசிய தலைவரான ராகுல், வயநாட்டில் 2019ல் போட்டியிட்டப்ப, மாநிலம் முழுதும் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசி, மொத்தமுள்ள 20 தொகுதிகள்ல 15ஐ அள்ளிடுச்சு... உங்க கூட்டணி மண்ணை கவ்விடுச்சு... அது, 'ரிப்பீட்டு' ஆகிடுமோன்னு நீங்க பயப்படுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் என, நீங்கள் அளித்த வாக்குறுதியை நம்பி ஓட்டளித்த தாய் ஒருவர், தற்போது தன்னை நிராகரித்தது ஏன் என்று, ஸ்டாலினை நோக்கி எழுப்பிய கேள்வி, சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இனி, ஸ்டாலினின் பொய்களும், பித்தலாட்டங்களும் எடுபடாது.
டவுட் தனபாலு: மகளிர் உரிமைத் தொகை, தேர்தலில்பெரும் பிரளயத்தை கிளப்பும்என்பதை தி.மு.க.,வினரும்தெரிஞ்சுக்கிட்டாங்க... அதனால தான், 'விடுபட்ட மகளிருக்கு தேர்தல் முடிஞ்சதும், உரிமைத் தொகை தரப்படும்'னு ஊர், ஊரா உதயநிதி பிரசாரம் பண்ணிட்டு இருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ஒன்பது, 'சம்மன்' அனுப்பியும் அமலாக்கத் துறை விசாரணைக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தான் குஜராத் முதல்வராக இருந்த மோடியை, சி.பி.ஐ., விசாரணைக்கு அழைத்தது. அவர் சி.பி.ஐ., முன் ஆஜராகி, எட்டு மணி நேரம் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
டவுட் தனபாலு: மோடியின் மடியில் கனமில்லை. அதனால், அஞ்சாமல் ஆஜராகி, விசாரணையை எதிர்கொண்டார்... குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டார்... ஆனா, கெஜ்ரிவால் நிலை அப்படி இல்லையே... அதனால தான், இப்ப கம்பிகளுக்கு பின் கைதியாக நிற்கிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

